சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியர்வர்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை சேத்துப்பட்டு பகுதி தனியார் மருத்துவமனையிலும், கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவை போல் தமிழ்நாட்டிலும் முதற்கட்டமாக பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை கொரோனா போல், இந்த வைரஸும் பாதிப்பை ஏற்படுத்தினால், மீண்டும் லாக்டவுன் வரப்போவதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் #Lockdown என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்.
மக்களே அச்சப்பட வேண்டாம்..!!
தமிழ்நாட்டில் உருமாற்றம் அடைந்த HMPV பாதிப்புகள் இல்லை என்றும் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. HMPV வைரஸ் காய்ச்சல் நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான் என்றும் சீனாவில் இருப்பது போல் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
HMPV வைரஸின் அறிகுறிகள்..!!
சளி, இருமல், புளு காய்ச்சல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் உள்ளிட்டவை இந்த வைரஸின் அறிகுறிகள் ஆகும். இது தவிர, சிலருக்கு மூச்சிரைப்பு, சுவாசிப்பதில் கோளாறு போன்ற தொந்தரவுகளும் இருக்கும். பாதிப்பு அதிகமாகும் பட்சத்தில் நிமோனியா காய்ச்சல், நுரையீரல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.