சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் பேருந்துக்கு வழிவிடாமல் சென்றதை கேட்ட தனியார் பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரை சரமாரியாக இளைஞர்கள் தாக்கிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த கோகுல்நாத் என்பவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல வெள்ளாள குண்டத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கி சென்றுள்ளார். சேலம் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அருகே சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வழிவிடுமாறு கூறியுள்ளனர்.
அப்போது, பேருந்துக்கு முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் வழி விடாமல் சென்றதாகவும், ஒரு இடத்தில் பைக்கை தனியார் பேருந்து முந்திச் சென்ற நிலையில், “ஹாரன் அடித்தால் வழிவிட மாட்டீர்களா” என நடத்துநர் பூபாலன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பேருந்து நிலையத்திற்கு வந்த சிறிது நேரத்தில் ஐந்து பேருடன் வந்து, ஓட்டுநர் கோகுல் மற்றும் நடத்துநரிடம் தகராறு செய்ததும் மட்டுமின்றி, பேருந்துக்குள் ஏறி அவரை ஒருமையால் திட்டி சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் பேருந்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இதில் காயமடைந்த ஓட்டுநர் ஓட்டுநர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். இது குறித்து கோகுல்நாத் அளித்த புகாரின்பேரில் இருவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.