கேரளாவை சேர்ந்த காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்த காதலில் கிரீஷ்மாவுக்கு சாகும்வரை தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு – கேரள எல்லையில் பாறசாலை கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதான ஷாரோன் ராஜ். பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறைப்பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு கிரீஷ்மாவுக்கு பெற்றோர்கள் மாப்பிளை பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவித்த நிலையில், ஷாரோன் ராஜ் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் ஷாரோனை கொலை செய்ய திட்டம் போட்ட கிரீஷமா, சமாதானம் பேசுவதுபோல், வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற ஷாரோனுக்கு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது காதலியின் வீட்டிற்கு சென்ற ஷாரோனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து அந்த பெண் கொடுத்துள்ளார். இவருக்கு உடந்தையாக அவரது தாய் மாமா உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர். அதை குடித்த ஷரோன் ராஜ், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பரிசோதனையில் அவர் விஷயம் அருந்தியது தெரியவந்தது. இந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. கிரீஷ்மா கொலை நோக்கத்துடன் கடத்தல் மற்றும் சாட்சியங்களை அழித்தது போன்ற குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அதே நேரத்தில் அவரது மாமா நிர்மல்குமார் ஆதாரங்களை மறைத்ததற்காக ஐபிசி இன் பிரிவு 201 இன் கீழ் தண்டிக்கப்பட்டார். இருப்பினும், ஆதாரங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தாயார் சிந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, ஷரோன் ராஜ் கொலை வழக்கில் கிரீஷ்மாவை குற்றவாளி என கடந்த 17ஆம் தேதி கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், கிரீஷ்மா மற்றும் அவரது மாமா நிர்மல்குமாருக்கு இன்று (20-01-25) தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷரோன் ராஜ் கொலை வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கிரீஷ்மாவின் மாமா நிர்மல்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக, இந்த நிலையில் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான க்ரீஷ்மா தனது தாய் தந்தையருக்கு தான் ஒரே மகள் என்றும், தான் படிப்பைத் தொடர விரும்புவதாகவும், தனக்கு 24 வயது மட்டுமே ஆவதாகவும் தனது வயதை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான 586 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை காலை 11 மணி அளவில் நீதிபதி பஷீர் வாசிக்கத் தொடங்கினார்.
அதில், ஷாரோன் ராஜை மட்டுமல்ல, காதலின் உன்னதமான உணர்வையும் சேர்த்தே கிரீஷ்மா கொலை செய்துள்ளார். ஷாரோன் ராஜை, க்ரீஷ்மா காதல் என்ற பெயரில் நம்ப வைத்து வீட்டிற்கு அழைத்து விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். ஒருமுறை இல்லை பலமுறை ஷாரோனை கொலை செய்ய முயன்று கொலை செய்து உள்ளார். ஆகையால் இது முற்றிலும் திட்டமிட்ட ஒரு படுகொலை.
கிரீஷ்மா மீதான காதலுக்கு அடிமையாக இருந்த ஷாரோன் ராஜ், உள் உறுப்புகள் அழுகிய நிலையில், 11 நாட்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மரணப் படுக்கையில் இருந்தபோதும் காதலியை காட்டிக்கொடுக்கவில்லை. தான் இறந்தாலும், கிரீஷ்மா தண்டிக்கப்படுவதை ஷரோன் விரும்பவில்லை. காதலுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ள கிரீஷ்மாவுக்கு தண்டனை அளிப்பதில் இருந்து, அவரின் வயதையோ, அவருக்கு குற்றப் பின்னணி இல்லை என்பதையோ கருத்தில் கொள்ள முடியாது. எனவே கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். இருப்பினும், நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது, அழத் தொடங்கிய கிரீஷ்மா, இறுதியில் மரண தண்டனை என நீதிபதி அறிவித்ததும், அழுகையை நிறுத்தி கனத்த மௌனத்திற்கு சென்றார்.
Readmore: உடற்பயிற்சி, டயட்டை கடைபிடித்தாலும் உடல் எடை குறையவில்லையா?. இந்த தவறுகள்தான் காரணம்!