திருப்பூர் அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த பரவலான மழை காரணமாக, அமராவதி அணையில் உபரி நீர் திறக்கப்பட்டதால், அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் கல்லாபுரம், ருத்ராபாளையம், குமரலிங்கம், கொழுமம், சர்க்கார், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம், கணியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில், முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும், அதைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அமராவதி அணையில் இருந்து குட்டிகளாக தப்பி வரும் முதலைகள் ஆற்றின் கரையோர பகுதிகளில் தஞ்சம் அடைந்து தற்பொழுது இனப்பெருக்கம் செய்து பெருமளவில் உருவெடுத்துள்ளன என சொல்லப்படுகிறது.
அந்தவகையில், தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் ஆற்றுப்பாலம் அருகே, ஆற்றில் முதலை நீந்தியதாக தகவல் பரவியது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன், தாளக்கரை மற்றும் தாராபுரம் அமராவதி ஆற்று பகுதியில், முதலை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் முயற்சித்தும் சிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் முதலை நடமாட்டம் உள்ளதாக தகவல் எழுந்துள்ளது. வனத்துறையினர் ஆய்வு செய்து, இம்முறையாவது முதலையை பிடிக்க வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.