சிபிஐ அதிகாரி பேசுவதாக மிரட்டி சேலம் தொழிலதிபரிடம் ரூ.1 கோடி பறித்த ராஜஸ்தான் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த தொழில் அதிபருக்கு அண்மையில் போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, “உங்களது செல்போன் எண்ணானது பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது. இதனால் உங்கள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் சிபிஐ அதிகாரியிடம் பேசுங்கள்” எனச் சொல்லி அந்த அழைப்பை ஒரு போலி சிபிஐ அதிகாரி ஒருவருக்கு மாற்றியுள்ளார்.

அந்த போலி சிபிஐ அதிகாரி, போலீஸ் சீருடையில் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் சேலம் தொழில் அதிபரிடம், “உங்களை கைது செய்ய உள்ளோம். நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவும், நாங்கள் உங்களை கைது செய்யாமல் இருக்கவும் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணத்தையும் நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டும். அதனை நாங்கள் சரிபார்க்கும் வரை நீங்கள் எங்கள் டிஜிட்டல் கஸ்டடியில்தான் இருக்க வேண்டும். வீடியோ கால் இணைப்பை தூண்டிக்கக் கூடாது; இதைபற்றி வேறு யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இல்லையென்றால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று மிரட்டியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர், தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை தெரிந்துகொள்ளும் முன்பே மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்குக்கு ரூ.1 கோடி பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த தொழிலதிபர் இதுகுறித்து தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். அப்பிரிவு கூடுதல் டிஜிபி-யான சந்தீப் மித்தல் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து இந்த மோசடியின் பின்னணியில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பிரதீப் சிங் (24), சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த யஷ்தீப் சிங் (24) ஆகிய இருவரையும் சண்டிகரில் பதுங்கி இருந்தபோது கைது செய்தனர். இக்கும்பல் இதே பாணியில் பலரிடம் கோடிக் கணக்கில் பணம் பறித்துள்ளது. அவர்களிடமிருந்து ரூ.23 கோடியே 25 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Readmore: இனி தங்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது போல!. ஒரு சவரன் 2 லட்சமாக எகிறும்!. ஒரு கிராம் 25,000 ஆக உச்சம் தொடும்!. அதிர்ச்சி தகவல்!