விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வரும்நிலையில், அண்மையில் பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா என்ற பெயரில் மோசடி நடைபெறுவதாக, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும்நிலையில், டிராக்டர் வாங்குவதற்கு 50% மானியம் தரக்கூடிய வகையில், PM Kisan Tractor Scheme என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவதாக மோசடி இணையதளங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, PM Kisan Tractor Scheme என்ற பெயரில் வந்துள்ள இணையதளத்தில், விவசாயிகள் டிராக்டர் வாங்குவதற்கு மத்திய அரசு 20% முதல் 50% வரை மானியம் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை உண்மை என நினைக்கும் விவசாயிகள் பலர், அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து, இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், இது உண்மையில்லை என்றும், விவசாயிகளை மோசடி செய்யும் இணையதளம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கூற்றின்படி, PM Kisan Tractor Scheme என்ற பெயரில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, மோசடி விளம்பரத்தை பார்த்து விவசாயிகள் ஏமாற வேண்டாம் என்றும், விவசாயிகள் தங்களது தனிப்பட்ட விவரங்களை மோசடி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் இதுபோன்ற பல போலியான இணையதளங்கள் உலா வருவதை சுட்டிக் காட்டியுள்ள மத்திய அரசு, மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக எச்சரித்துள்ளது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட இணையதளமாக இருந்தால், URLல் https:// இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

மேலும், இணையதள பெயரின் கடைசியில் .gov.in என்று இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அரசு திட்ட போர்ட்டலின் இறுதியில் .nic.in என இருக்க வேண்டும். இதுபோன்ற எதுவும் இல்லாவிட்டால், அந்த இணையதளங்களில் போலி என்பதை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

Readmore: சேலத்தில் அதிர்ச்சி!. காட்டுக்குள் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை!. பூண்டு வியாபாரி, கூட்டாளி கைது!