சபரிமலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் யாரும் பம்பை ஆற்றில் இறங்க வேண்டாம் என பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதனால் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களாக சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் சபரிமலை சன்னிதானம் பகுதியில் கனமழை பெய்து வந்தது. இருந்தாலும் பக்தர்கள் தொடர்ந்து மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 60,983 பேர் சாமி தரிசனம் செய்திருந்தனர். மழையால் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சபரிமலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் யாரும் பம்பை ஆற்றில் இறங்க வேண்டாம் என பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பம்பை மற்றும் ககி ஆறுகள் சந்திக்கு திருவேணி பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பம்பை ஆற்றில் புனித நீராட ஐயப்ப பக்தர்கள் யாரும் இறங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சபரிமலையில் இன்றும் (டிசம்பர் 02) மழை தொடர்ந்து வருகிறது. நேற்றை விட சிறிது குறைவு தான் என்றாலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பம்பை நதியில் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. நேற்றும் பம்பை நதியில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பம்பையில் தொடர்ந்து நீரின் அளவு அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீலிமலை மற்றும் அப்பாச்சிமேடு வழியாக பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நீலிமலை பாதையில் மொத்தமாக 18 இடங்களில் நடைபந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மரக்கோட்டம் முதல் சரங்கொத்தி வரை பக்தர்கள் வரிசையில் நிற்கும் இடங்களிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழையில் நனையால் பக்தர்கள் எளிதில் சன்னிதானத்தை சென்று அடைய முடியும். தொடர்ந்து மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

சபரிமலையில் பெய்து வரும் கனமழையால் சந்திராநந்தன் சாலை மற்றும் சுவாமி ஐயப்பா சாலை வழியாக சன்னிதானம் வரும் பக்தர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக டிசம்பர் 04ம் தேதி வரை கேரளாவில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: கார், டிராக்டர் வைத்திருப்பவர்கள் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெறுகிறார்களா..? புகாரளித்தால் உடனே நீக்கப்படுவார்கள்..!!