ஆரோக்கியம் என்பது நமது உணவுப் பழக்கவழக்கத்தில் இருந்து தொடங்குகிறது. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு, தாய்ப்பால் மூலமே அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைத்துவிடும். ஆறு மாதங்களுக்குப் பின், வேகவைத்து மசித்த காய்கறிகள், மசித்த சாதம், பழங்கள், சத்துமாவு கஞ்சி போன்றவற்றை அறிமுகம் செய்யலாம். அப்படி அறிமுகம் செய்யும்போது, குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை செக் செய்து கொள்ளவும்.
அதே போன்று அவர்களுக்கு 2 வயது ஆகும் வரை சில வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்படியான உணவுகள் என்ன, ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். குழந்தைக்கு ஒரு வயது முடியும் வரை சர்க்கரை சேர்க்க கூடாது என்று சொல்வதுண்டு. ஆனால் இரண்டு வயது முடியும் வரை சர்க்கரை சேர்த்த எந்த உணவுகளையும் எடுத்துகொள்ள கூடாது.
சிறு குழந்தைகளுக்கு கேக் பழக்கிவிடும் பெற்றோர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேக் சுவையாக இருக்கலாம். நாவின் சுவைமொட்டுகளுக்கு பிடித்த ஒன்றாக இருக்கலாம். குழந்தைக்கு இதை பழக்கினால் அதன் மீது அதிக விருப்பத்தை கொண்டிருப்பார்கள். இதனால் மற்ற சுவைகளில் கசப்பு, புளிப்பு போன்றவற்றை விரும்பமாட்டார்கள். சாக்லேட், ஸ்வீட்ஸ், ஜெல்லி போன்ற எதையும் பழகாமல் இருப்பது நல்லது.
சில உணவுகள் பதப்படுத்தப்பட்டு பெறுவது ஆரோக்கியமானதாக இருக்கும். குழந்தைக்கு பேஸ்டுரைஸ் செய்யாத பால் பொருள்கள், யோகர்ட், சீஸ், ஜூஸ் போன்றவற்றை குழந்தைக்கு அளிக்க கூடாது. இதில் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருந்தால் அது குழந்தைகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். மேலும் மோசமான அல்லது தீவிர நிலையில் உயிருக்கு ஆபத்தான நோயை உண்டு செய்யலாம்.
குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பிறகு உப்பு சேர்த்து உணவு கொடுப்பதுண்டு. ஆனால் அதிகப்படியான உப்பு கொண்ட பாக்கெட் உணவுகள், தின்பண்டங்கள், அதிக இனிப்பு, உப்பு சேர்த்த உணவுகள் குழந்தைக்கு உடல் பருமன் உண்டு செய்யும். மேலும் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் வரை உண்டு செய்யலாம். மேலும் சிறுவயதிலேயே உப்பு சேர்த்த உணவுகள் நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை உண்டு செய்யலாம்.
எண்ணெயில் பொரித்த சமோசா, பக்கோடா, கட்லெட், சிப்ஸ், சிப்ஸ் போன்றவை அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளவை. குழந்தைகளுக்கு இந்த வகையான ஸ்நாக்ஸ் வகைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் இவற்றில் எந்தவிதமான ஊட்டச்சத்தும் இல்லை. ஒரு வயதுக்கு பிந்தைய குழந்தைகளுக்கு இதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைக்கு ஒரு வயது முடியும் வரை பசும்பால் கொடுக்க கூடாது என்று சொல்லும் நிலையில் அவர்களுக்கு இரண்டு வயது முடியும் வரை காஃபி டீ கொடுக்க கூடாது. கஃபைன் சேர்ந்த பானங்கள் குழந்தைக்கு பொருந்தாது. தேநீரில் இருக்கும் டானின் குழந்தைக்கு கொடுக்கும் உணவில் இருக்கும் இரும்புச்சத்து உறிஞ்சுவதை தடுக்கலாம்.
மைதா சேர்த்த கேக், பிஸ்கட் வகைகள், டோனட்ஸ் போன்றவற்றில் ஊட்டச்சத்து இல்லை. இது சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளி கொண்டுள்ளன, குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் பிரட், பிஸ்கட் என்று கொடுப்பதை தவிர்க்கவேண்டும். தேன் இனிப்புக்கு மாற்றாக சேர்க்கலாம் என்றாலும் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகள். கொட்டைகள் போன்றவற்றை கொடுக்கும் போது குழந்தைகளின் அருகில் இருக்க வேண்டும்.
ஏனெனில் சில நேரங்களில் குழந்தை வேகமாக விழுங்கும் போது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம். அதனால் வாயில் கரையாத ,ஈறுகளால் மெல்ல முடியாத உணவுகளை கொடுக்க வேண்டாம். குழந்தை சாப்பிடும் போது உயரமான நாற்காலியில் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருப்பதை உறுதி செய்யுங்கள்.