அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது துணை முதல்வர் மகன் இன்பநிதி மற்றும் அவர்களது நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரையே எழுந்து செல்ல அமைச்சர் மூர்த்தி கூறியது தொடர்பான விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விமர்சையாக நடைபெற்றது. 1000 காளைகளும், 900 காளையர்களும் போட்டியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து இருந்தனர். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது, உதயநிதியின் மகன் இன்பநிதியுடன் அவர்களின் நண்பர்களும் வந்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நண்பர்கள் அமர வைப்பதற்காக அமைச்சர் மூர்த்தி, ஆட்சியரை எழுந்து செல்ல அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, “துணை முதல்வர் தனது இருக்கையில் இருந்து எழுந்து நிற்கும்போது, விதியின்படி மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் எழுந்து நின்றேன். இந்த விஷயத்தை பலரும் திரித்து பரப்பி வருகிறார்கள். இவ்வாறான சர்ச்சை செயலை செய்ய வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், “மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்? துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

Readmore: சேலம்| எருதாட்டத்தில் காளை முட்டியதில் சோகம்!. தேமுதிக முன்னாள் கவுன்சிலர் உயிரிழப்பு!