TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 8ம் தேதி முதல் நடைபெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08.01.2025 அன்று முதல் திங்கள் முதல் வெள்ளி) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் வரும் 8ம் தேதி சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதிகளில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை வைத்து முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பபட்டுள்ளது. இந்த அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு 322 பேர் அரசுப் பணியினை பெற்றுள்ளனர். மேலும், குரூப் 4ல் அடங்கிய காலிப்பணியிடங்களுக்கான, தேர்வு அறிவிப்பு 25.4.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு பணி நிலைகளில் உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகின்றன. இதில் பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வுக்குத்தான் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட பல லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள். விஏஓ, இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்கள் என்றாலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள். நடப்பு ஆண்டில் சுமார் 8 ஆயிரம் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு எழுத 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள்.
கடந்த ஆண்டுக்கான தேர்வு நடந்து முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் போன்ற அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை அடுத்த ஆண்டும் நடைபெற இருக்கும் தேர்வு விவரங்களை முன் கூட்டியே வெளியிட்டு வருகிறது. ஆண்டு கால அட்டவணைப்படி, 2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. ஜூலை மாதம் நடைபெற இருக்கும் குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் தற்போதே தயாராகி வருகிறார்கள்.
தேர்வர்கள் பலரும் கோச்சிங்க் சென்டர்களிலும் சென்று படித்து வரும் நிலையில், ஏழை எளிய தேர்வர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பிலும் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். மாவட்ட வாரியாக மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தின் மூலமாகவும் சில நேரங்களில் நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.