வெள்ளி விலை உயர்வு எதிரொலியால் வடமாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கான ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவில் வராததால் சேலத்தில் வியாபார்கள் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்
தமிழகத்திலேயே சேலத்தில்தான் வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் செவ்வாய்பேட்டை, திருவாகவுண்டனூர், கந்தம்பட்டி, சிவதாபுரம், திருமலைகிரி உட்பட பல்வேறு இடங்களில் வெள்ளிப் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு வெள்ளி கால் கொலுசு, அரங்கான் கொடி, குங்குமச்சிமிழ், சில்வர் தட்டு, குடம் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வெள்ளிப்பொருட்கள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, டெல்லி, ஆக்ரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி கொலுசுகள் சார்ந்த பட்டறைகள் இந்த மாவட்டத்தில் உள்ளன. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கால் கொலுசு தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் சேலத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி இருக்கும். சமீபகாலமாக தங்கத்தை போலவே வெள்ளியின் விலை அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை யொட்டி ஆண்டுதோறும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் அதிகளவில் வரும். ஆனால், இந்தாண்டு தீபாவளி வரும் 31ம் தேதி, அதாவது இன்னும் 28 நாட்களே உள்ளநிலையில், எதிர்பார்த்த ஆர்டர்கள் வராததால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். வடமாநிலங்களில் பெய்து வரும் மழையாலும், வெள்ளி விலை உயர்வாலும் எதிர்பார்த்த ஆர்டர்கள் வரவில்லை. ஆர்டர்கள் வராததால் வருவாய் பாதித்துள்ளதாக சேலம் வெள்ளி கால்கொலுசு கைவினையாளர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜன் தெரிவித்தார்.
Readmore:மகாளய அமாவாசை கோலாகலம்!. பவானி கூடுதுறையில் அலைமோதிய கூட்டம்!. தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!