சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில், மகாவிஷ்ணு என்பவர் குருகுலங்கள் தொடர்பாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. அரசுப் பள்ளியில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். ‘தன்னை உணர்ந்த தருணங்கள்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று தெரிவித்ததோடு மறுபிறவி குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பேசியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளம்பியுள்ளது.
மறுபிறவி குறித்து பேசுவது; ஆன்மீகம் குறித்து பேசுவது பள்ளி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு எதிர்ப்புகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, புகார் பள்ளிக்கல்வித்துறையினுடைய உயரதிகாரிகளுக்கு சென்ற நிலையில், தமிழக அரசினுடைய கவனத்திற்கும் சென்றது.
இதுகுறித்து எச்சரிக்கை விடுத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுத்துக் கொள்கிறேன். இது வேண்டுகோளாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம். பள்ளி குழந்தைகள் எனது பிள்ளைகள்.. இங்கு யாரை அழைத்து வர வேண்டும் என்பதை அறிவை பயன்படுத்தி நாம் யோசிக்க வேண்டும். வரும் அனைவரையும் கூட்டி வரக்கூடாது. பேசும்போது சும்மா உணர்ச்சிவசப்பட்டுக் கைதட்டுவதில் எந்தவொரு பயனும் இல்லை.
பள்ளிக்கு யாரை அழைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச புரிதல் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். மாணவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். யார் என்ன சொன்னாலும் அதைப் பகுத்தறிந்து பாருங்கள். மார்க் அதிகம் பெற்றால் மட்டும் புத்திசாலி ஆகிவிட மாட்டோம். நல்லது கெட்டது எது என்பதைப் புரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும்” என்றார்.