அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், துறை சார்ந்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திடீரென எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.
டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதை காரணம் காட்டி, பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை; அதிமுகவின் கொள்கை வேறு, கூட்டணி வேறு எனக்கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது திடீரென டெல்லி சென்றுள்ளார். இதனால், அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி மலரும் என்ற பேச்சு வலுவாக எழுந்துள்ளது.