தமிழக அரசு, விவசாயிகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கவே இந்த இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, அடுத்த 3 வருடங்களில் பசுமை எரிசக்தி கழகம் வாயிலாக, 1,685 விவசாய மின் பாதைகளை, சோலார் மின் பாதைகளாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு நடுவில், இலவச மின்சாரத்திற்கு வேளாண் துறை சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.
எனினும், ஒருசிலர் இந்த இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்டதைவிட,அதிகமாக மின்சாரம் உபயோகப்படுத்துகிறார்கள்.. சிலர் இலவச விவசாய மின் இணைப்பு என பெற்று வர்த்தகம், தொழிற்சாலை போன்றவற்றிற்கும் சட்டவிரோதமாகவும் பயன்படுத்துகிறார்கள்.
அதேபோல, கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து பல நுாறு ஏக்கர் நிலங்களை வாங்கி, தமிழக அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை, இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிலங்களில் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. விவசாயிகள் தவிர, மீன், இறால் பண்ணைகள், கிடங்குகள், சிறுதொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு விதியை மீறி பயன்படுத்துவதாகவும் புகார் வந்தவண்ணம் இருந்தது.
எனவேதான், தேவைக்காக மின் இணைப்பு பெற்றுக்கொண்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் உள்ள இணைப்புகளையும், நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத இணைப்புகளையும் கணக்கெடுத்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு, வேளாண் துறை செயலர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இப்பணிகள் அனைத்தையும் மாவட்ட வாரியாக சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, அதிகாரிகளும் களமிறக்கப்பட்டனர்.
தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், வேளாண் பொறியியல் பிரிவு பொறியாளர்கள், இதற்காக விவசாய நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை, இம்மாத இறுதிக்குள் தங்கள் தலைமை அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும். கணக்கெடுப்பின் போது விவசாய நிலம் தொடர்பான தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு, வருவாய் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. எனவே, இவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என, வேளாண் துறை செயலர் அபூர்வா, தோட்டக்கலைத் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு உள்ளனர்.ஆனால், கணக்கெடுப்பு குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை என கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் தரப்பில் கூறப்படும்நிலையில், வருவாய்த்துறையினரும் தற்போது கைகோர்த்துள்ளதால், கணக்கெடுப்பு பணிகள் விரைந்து நடந்து கொண்டிருக்கின்றன.
Readmore: உலகில் அதிகம் சப்ஸ்கிரைபர்களை பெற்ற டாப் 10 யூடியூப் சேனல்கள்!. கோடிகளில் சம்பளம்!. லிஸ்ட் இதோ!.