சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் இருக்கிறார். அவர் விரக்தியில் அதிமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி. அதிமுக ஆலமரம். அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது..? அதிமுகவைத் தொட்டுப் பார்த்தால் கெட்டுப் போவீர்கள். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அண்ணாமலையால் அதிமுகவை அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பாஜகவுக்கு என்றுமே பகல் கனவுதான்.

அண்ணாமலை அழிவை நோக்கிச் செல்கிறார். அவரது பேச்சுக்கள் அப்படித்தான் இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கோட்டை பக்கமே வர முடியாத நிலைதான் தற்போது உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பேசி வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், அதிமுக – பாஜக தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருவது இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.