மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 2வது அலகில் வருடாந்திர பராமரிப்பு பணி நடந்து வரும் நிலையில் 1, 3 மற்றும் 4வது அலகில் மட்டும் மின் உற்பத்தி நடந்து வருகிறது. முதல் பிரிவில் 3வது அலகில் நிலக்கரி கையாளும் பிரிவில் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று மாலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 50 அடி உயரத்திலிருந்து நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து கீழே விழுந்தது.

20 டன் நிலக்கரி விழுந்ததில் ஒப்பந்த தொழிலாளர்கள் 10க்கும்‌ மேற்பட்டோர் நிலக்கரி குவியலில் சிக்கினர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்ரீகாந்த் (24), மனோஜ் குமார்(27), சீனிவாசன் (44), முருகன் (28) கௌதம் (20) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அனல் மின் நிலைய ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி வாகனங்களைக் கொண்டு நிலக்கரி குவியலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நிலக்க்ரி குவியலில் சிக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் வெங்கடேசன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: மக்களே உஷார்!. சேலத்தில் முகமூடி அணிந்து இரவு நேரத்தில் சுற்றித்திரியும் கொள்ளையர்கள்!. வைரலான வீடியோவால் பீதி!