எடப்பாடி அருகே திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆன நிலையில், கைக்குழந்தையை தவிக்கவிட்டு விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் சித்தூர் கிராமம் கரட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி. இவரது மனைவி சுதா (வயது 20). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக உடல்நலப் பிரச்சனைகளால் சுதா, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தான், நேற்று மாலை அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து சுதா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் கிணற்றில் குதித்து சுதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூலாம்பட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆன நிலையில், கைக்குழந்தையை விட்டுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலப் பிரச்சனைகளால் தற்கொலையா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : எடப்பாடி அருகே அதிர்ச்சி..!! குடும்பத்தை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு பக்கத்து வீட்டிற்குள் நுழைந்த ஆட்டு வியாபாரி..!! விடிந்ததும் சடலமாக கிடந்த பெண்..!!