மூலப்பாதையில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 30). இவர், கடந்த 16ஆம் தேதி தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒக்கிலிபட்டி வழியாக சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், சிவசங்கர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எடப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 20) உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.