கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் ஏற்பட்ட கலவம் தொடர்பாக மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளி என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திராவிடமணி 2-வது குற்றவாளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அப்பள்ளியில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் பள்ளி பேருந்துகளுக்கு தீவைத்து எரித்து, கணினி உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், போலீஸ் வாகனங்களுக்கும் கலவரக்காரர்கள் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து, போலீஸார் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டு நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
விசாரணையின் முடிவில், மொத்தம் 916 பேர் மீது 24,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். கலவரம் தொடர்பாக 666 பேர் மீது 20,000-க்கும் மேற்பட்ட பக்கங்களும், 53 இளம் சிறார்களுக்கு எதிராக சிறார் நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், போலீஸ் பாதுகாப்புக்காக வந்த வாகனங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 120-க்கும் மேற்பட்டோர் மீதும், பள்ளி வளாகத்தில் இருந்த பசு மாடுகளை திருடிய வழக்கில் 5 பேர் மீதும் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முதல் கட்ட விசாரணை விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும், இந்த வழக்கில் மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளி என்றும் இரண்டாவது குற்றவாளி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திராவிடமணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில், இதுபோன்று வேறு எந்த வழக்கிலும் இந்த அளவிற்கு குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கிடையாது என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.