வங்கக் கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை உருவாகும். இது நிச்சயம் புயலாக மாறும். ஆனால் தமிழகத்தில் கரையை கடக்காது. அது ஆந்திரா அல்லது ஒடிஸாவை நோக்கி செல்லும். எனவே அடுத்த புயல் வருவது குறித்த தகவல்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு தொடர் மழை பெய்யும். ராணிப்பேட்டை, வேலூர், போளூர், ஆற்காடு, ஆம்பூர்- திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இடியுடன் கூடிய மழை 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை விளாசும் என தெரிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வருகிற 24ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 24ம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளைய தினத்தை பொறுத்தவரை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Readmore: ரயிலில் பட்டாசு எடுத்துச்செல்ல தடை!. மீறினால் 3 ஆண்டுகள் சிறை!. அபராதம்!. புகார் எண்கள் அறிவிப்பு!