பவானிசாகர் அருகே தண்ணீர், உணவு தேடி ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்து ரேஷன் கடையை சூறையாடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் மான், சிறுத்தை, யானை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் போல வெயில் வாட்டி வைத்து வருகின்றன. இதனால், வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யானை போன்ற விலங்குகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலைகளை கடந்து தெங்கு மரஹடா பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் தெங்கு மரஹடா கிராமத்தில் புகுந்தது.அங்குள்ள ரேஷன் கடை கதவை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றும், தூக்கி வீசியும் சூறையாடியது. சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானையை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் யானைகள் ஊருக்குள் வரலாம் என்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

Readmore: சேலம் மாவட்டமே ஸ்தம்பிக்கும்!. மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்!. தமிழக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!.