எடப்பாடியில் மது போதையில் தந்தையே பெற்ற மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டி சக்தி நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 64). இவரது மகன் சீனிவாசன் (வயது 30). இவர், இருசக்கர வாகன மெக்கானிக். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனிவாசனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், சீனிவாசன் தனது தந்தை மாதேஸ்வரனுடன் சக்தி நகரில் வாசித்து வந்துள்ளார். தந்தை – மகன் இரண்டு பேருக்குமே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த வகையில், நேற்றிரவு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த மாதேஸ்வரன் இரும்பு கம்பியால் மகன் சீனிவாசனின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எடப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தந்தை மாதேஸ்வரனை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : 2 வருட காதல்..!! திடீரென உண்மையை போட்டுடைத்த காதலன்..!! வேதனையில் காதலி எடுத்த விபரீத முடிவு..!!