ஓடை கரையில் கட்டப்பட்டிருந்த 2 மாடி கொண்ட கான்கிரீட் வீடு மண்ணரிப்பு காரணமாக சரிந்து விழும் பதபதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர்தப்பினர்.
கோவை ரத்தினபுரி ஹட்கோ காலனி பகுதியில் சங்கனூர் ஓடை செல்கிறது. நெய்யல் ஆற்றில் கலக்கும் இந்த ஓடை நீர் தற்போது கழிவுநீராக கலக்கிறது. மேலும் இந்த ஓடையை ஆக்கிரமித்து சிலர் வீடுகளை கட்டியுள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஓடையை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ட்ந்து இருபுறமும் சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ஓடையின் கரையில் சுரேஷ் என்பவர் வீடு கட்டி வசித்து வருகிறார். இந்த பணிகள் காரணமாக இவர் கடந்த கடந்த சில தினங்களாக குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இந்தநிலையில், தேங்கியிருந்த சாக்கடை கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. ஓடையில் இருந்த சாக்கடை மண் அகற்றப்பட்டிருந்த நிலையில், மண்ணரிப்பு காரணமாக கடந்த 20ம் தேதி சுரேஷின் 2 மாடி வீடு ஓடைக்குள் சரிந்து விழுந்து தரை மட்டமானது. முன்னதாக கட்டிடம் இடிந்தும் விழும் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அருகில் இருந்தவர்களும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இரவு சுமார் 10 மணி அளவில் மாடி வீடு அப்பகுதி மக்கள் கண்முன்னே சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அருகில் இருந்த ஓட்டு வீடும் சேதமடைந்தது. இந்த காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் செல்ஃபோன்களில் வீடியோ காட்சிகளாக பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஓடையின் இருபுறமும் காங்கிரீட் சுவர் அமைத்து கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பே ஓடைக்கரையோரம் இருப்பவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை காலி செய்ய அறிவுறுத்திவிட்டோம். தற்போது 2, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு காங்கிரிட் சுவருடன் கூடிய கால்வாய் ஆக்கிரமிப்பு ஏற்படாத வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறினர்.