அந்தியூா் அருகே தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் படுகாயம் அடைந்தனா்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் விராலிக்காட்டூா் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று சரக்கு வாகனம் சென்றுக்கொண்டிருந்தது. ஆலயங்கரடு அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் 14 தொழிலாளர்கள் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்த அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், அந்தியூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். விபத்து குறித்து வெள்ளிதிருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.