சேலம் கந்தப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை பிடித்து சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருளை வடமாநிலத்தவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது.
சேலம் மாவட்டம் கந்தப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று திடீரென டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இருப்பினு, கேரளா பதிவெண்ணுடன் தறிகெட்டு ஓடிய கார் ஒருவழிப்பாதையில் மாறி, வெறும் 3 சக்கரங்களுடன் அதிவேகமாக சென்று நெய்க்காரப்பட்டி கோவில் பகுதியில் நின்றது.
இதையடுத்து, காரில் இருந்தவர்கள் தப்பியோட முயன்றபோது பொதுமக்கள் பிடித்து விசாரித்ததில் அவர்கள் வடமாநிலத்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் காரை சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக ஹான்ஸ் குட்கா புகையிலை போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த திலீப் குமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.