அதிகப்படியான உற்பத்தி செலவு மற்றும் உணவு பணவீக்கத்தின் காரணமாக ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் வேகமாக நகரக்கூடிய நுகர்வோர் பொருட்களை (FMCG) உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடினமான காலத்தை சந்தித்து வருகின்றன. ஏனெனில் இந்த நிறுவனங்களின் லாப விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. கூடுதலாக, இந்த FMCG நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் பாமாயில், காபி மற்றும் கோகோ போன்ற மூலப்பொருட்களின் விலைகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, சில FMCG நிறுவனங்கள், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.

எஃப்எம்சிஜி நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பாமாயில், காபி மற்றும் கோகோ போன்ற மூலப்பொருட்களின் விலைகள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, சில எஃப்எம்சிஜி நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. அதன்படி, டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு போன்ற அன்றாடப் பொருட்களின் விலைகள் உயரலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL), கோத்ரேஜ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (GCPL), Marico, ITC மற்றும் Tata Consumer Products Limited (TCPL) போன்ற பெரிய நிறுவனங்களின் விற்பனை குறைந்ததால் அதனை ஈடுசெய்ய விலை ஏற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், “எஃப்எம்சிஜி துறையின் மொத்த விற்பனையில் 65-68 சதவிகிதம் நகர்ப்புறங்களில் உள்ளது. மாறாக, நகர்ப்புற சந்தைகளுடன் ஒப்பிடுகையில் கிராமப்புற சந்தைகள் தங்கள் வளர்ச்சி விகிதத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன” என்றனர்.

GCPL-இன் தலைவரான சுதீர் சிதாபதி கூறுகையில், இரண்டாவது காலாண்டின் முடிவுகளை அறிவிக்கும் போது, தற்போதைய இடையூறுகளை ஒரு தற்காலிக கட்டமாகவே பார்க்கிறோம் என்று தெளிவுபடுத்தினார். லாப விகிதத்தை மீட்டெடுக்க செலவுகளை கட்டுப்படுத்தவும், விலை உயர்வை கவனமாக திட்டமிடவும் இருப்பதாகத் தெரிவித்தார்.

எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் மற்றும் மாறிவரும் நுகர்வோர் தேவை போன்ற காரணங்கள் இருந்தாலும் GCPL நிறுவனம் தொடர்ந்து சிந்தால், கோத்ரேஜ் நம்பர் 1 மற்றும் ஹிட் போன்ற பிரபலமான பிராண்டுகளில் நிலையான செயல் திறனை உறுதி செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். டாபர் இந்தியா, செப்டம்பர் காலாண்டில் அதிக விலைவாசி மற்றும் நகர்ப்புற தேவை குறைவு ஆகியவற்றால் சவாலான சூழலை எதிர்கொண்டது.

டாபர் சியவன்ப்ராஷ், புதினா ஹரா மற்றும் ரியல் ஜூஸ் போன்ற பிற தயாரிப்புகளையும் வெளியிடுகிறது. டாபர் இந்தியா நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 417.52 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 17.65 சதவீத சரிவைப் பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் மட்டும் நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் 5.46 சதவீதம் சரிந்து 3,028.59 கோடியாக குறைந்துள்ளது.

Readmore: கேரள ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்!. சேலத்தை சேர்ந்த 4 பேருக்கு நிதியுதவி!. முதல்வர் அறிவிப்பு!