இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். சிறப்பு வாய்ந்த தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நரகாசுரனை வதம் செய்ததற்காக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறப்படுகிறது. ஆனால், வட இந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடப்படும் இந்த தீபாவளி பண்டிகைக்கு வேறு சில காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக தீபாவளி பண்டிகை நரகாசுரனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. பூலோகத்தையும், விண்ணுலகத்தையும் ஆட்சி செய்த நரகாசுரன் தொடர்ந்து ஏற்படுத்திய அநீதியை அடுத்து, இந்திரன் முறையிட்ட காரணத்தால் கிருஷ்ண பகவான் நடத்திய லீலையில் சத்திய பாமா நரகாசுரனை வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான அவதாரம் ராமர் அவதாரம் ஆகும். சீதையை மீட்பதற்காக இலங்கை சென்று ராவணனை வதம் செய்த ராமர், மீண்டும் சீதையுடன் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி என்றும், அந்த நாளையே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்கள் ஏற்றி விழாவாக கொண்டாடடுவதாகவும் இந்தியாவின் பல பகுதிகளில் கருதப்படுகிறது. ராமாயணம், பகவத் கீதைக்கு இணையாக இந்துக்களின் மற்றொரு புனித நூலாக கருதப்படும் இதிகாசம் மகாபாரதம் ஆகும்.
மகாபாரதத்தில் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்வார்கள். பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதையே தீபாவளியாக கொண்டாடப்படுவதாகவும் கருதப்படுகிறது. தேவர்கள் – அசுரர்கள் இணைந்து பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து மகாலட்சுமி தேவி தோன்றினார். அவரை மகாவிஷ்ணு திருமணம் செய்த நாளே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும், இருளை நோக்கி வாழ்வில் ஒளியைத் தரும் பண்டிகையே தீபாவளி என்று மக்களால் நம்பப்படுகிறது.
தீபாவளியின் முக்கியத்துவம் : தீபாவளிக்கு ஏற்றப்படும் விளக்குகள், தீமை மற்றும் இருளை அகற்றி, மக்கள் மத்தியில் அன்பு, நன்மை மற்றும் தூய்மை நிறைந்த அற்புதமான சூழ்நிலையை உருவாக்குகிறது. தீபாவளி என்பது விளக்குகள், கொண்டாட்டம், பரிசுகளால் ஆனது மட்டுமல்ல. ஒருவரது வாழ்க்கையில், கடந்த கால செயல்களை நினைவு கூர்ந்து, வரவிருக்கும் ஆண்டிற்கான சரியான மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு நாளாகும். தீபாவளி பண்டிகை பிறருக்கு வழங்கவும், பிறரை மன்னிப்பதற்கான பண்டிகையாகும். இப்பண்டிகை, மக்கள் பகைமையை மறந்து, பகைவரை மன்னித்து, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கான நேரம் ஆகும்.
உலகில் உள்ள அனைத்து மதம், இனம், ஜாதி மக்களை ஒன்றிணைக்கும் கொண்டாட்டம் தீபாவளி.
எளிமையான புன்னகையும், இணக்கமான இதயமும் கடினமான இதயங்களைக் கூட உருக வைக்கிறது. மக்கள் மகிழ்ச்சியில் கலந்துகொண்டு ஒருவரையொருவர் அரவணைத்துக்கொள்ளும் நாள் இது. செழிப்பின் கொண்டாட்டமான தீபாவளி, இந்த ஆண்டு முழுவதும் நமது பணியையும், நல்லெண்ணத்தையும் தொடர வலிமையை தருகிறது. இதனால் மக்கள், ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள். மிக முக்கியமாக, தீபாவளி நம் உள்ளத்தை ஒளிரச் செய்கிறது. தீபாவளியின் விளக்குகள், பட்டாசுகள் நமது நிறைவேறாத ஆசைகள், இருண்ட எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, ஆழமான, சுய பிரதிபலிப்பை உணர நேரத்தையும் நமக்கு வழங்குகிறது.
அதனால் தான், இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் பட்டாசுகளை வெடித்தும், நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ‘நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எங்கள் Idp7News சார்பாக உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.