சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. ஆனால், இந்த விலை குறைவு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகித்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. . கடந்த மாதம் 25-ம் தேதி பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கு விற்பனையானது. பின்னர், இம்மாதம் 21-ம் தேதி ஒரு பவுன் ரூ.58,400-க்கும், 23-ம் தேதி ஒரு பவுன் ரூ.58,720-க்கும் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.30) கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,440-க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரு.59,520-க்கும் விற்பனையானது.
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்க நகை 8.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்க நகை 54 ரூபாய்க்கும், 1980 ஆம் ஆண்டு 100 ரூபாயை கடந்த தங்கத்தின் விலையானது, 1990 ஆம் ஆண்டு 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 2000 ஆண்டு 440க்கும், 2007 ஆம் ஆண்டு 1800 ரூபாய்க்கும், 2012 ஆம் ஆண்டு 3000 ரூபாய்க்கும், 2024 ஆம் ஆண்டு 7500 என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இதே போன்ற தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களிடம் அதிகமாக உள்ளது. தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 41 சதவிகிதம் லாபம் அடைந்துள்ளனர். இதுவரை தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது இல்லை, லாபம் மட்டுமே கிடைக்கும். 50 வருடத்தில் முதலீடு லாபமாக உள்ளது. எனவே வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இல்லை. தீபாவளி பண்டிகை நாட்களில் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகின்றன.
மேலும் உச்சத்தை நோக்கி தான் தங்கம் விலை செல்லும், அடுத்த 10 வருடத்தில் நினைத்து பார்க்க முடியாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். 2030ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் 1 லட்சம் ரூபாயை தாண்டி விடும். அடுத்த 10 வருடத்தில் ஒரு கிராம் 25ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு சவரன் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.