விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக தொடங்கியது.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
மாநாட்டிற்கு விஜயின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் வந்துள்ளனர். அப்போது, மாநாட்டு திடலில் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களை அமைதி காக்கும்படி அவர்கள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3:00 மணிக்கு மேல் கட்சியின் கொடி பாடலுடன் மாநாடு துவங்கியது. முதலில் பறையாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்னும் சிறிது நேரத்தில் கட்சி தலைவரான விஜய், மேடைக்கு வர உள்ளார். இந்த மாநாட்டில் நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.