சென்னை தலைமைச் செயலக கட்டிடத்தில் பலத்த சத்தத்துடன் திடீரென அதிர்வு உணரப்பட்டதையடுத்து, அதிகாரிகள் பதறியடித்துக்கொண்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தான் தமிழக அரசின் அனைத்து துறைகளும் செயல்பட்டு வருகின்றன. தலைமை செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை திடீரென அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் தளத்தில் உள்ள தரையில் இருக்கும் டைல்ஸில் சத்ததுடன் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்த அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்து பதறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதனிடையே, இது சாதாரண விரிசல் தான் என்றும், ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் போலீசார் விளக்கம் அளித்தனர். சேதம் அடைந்த பகுதிகளை, அதிகாரிகளும் அமைச்சர் எ.வ.வேலுவும் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, “14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட டைல்ஸ் என்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டடம் உறுதித் தன்மையுடன் உள்ளது. உடனடியாக பொறியாளர்களை அழைத்து வந்து ஆய்வு செய்துவிட்டோம். டைல்ஸ் விரிசல் ஏற்பட்ட இடத்தில் புதிய டைல்ஸ்கள் உடனடியாக மாற்றப்படும்.” எனத் தெரிவித்தார். கட்டிடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளே சென்று பணியாற்றலாம் என்று உறுதி அளித்தார்.
Readmore: ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி!. அமைச்சர் நேரில் வழங்கினார்!.