அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து, தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.22) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை (அக்.23) புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், இந்த புயலுக்கு “டானா” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா – மேற்கு வங்க கடற்கரையை 24-ம் தேதி நெருங்கும்.

தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கர்நாடகா, அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 24 முதல் 27-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (அக்.22) திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை (அக்.23) தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்குமீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புயலினால் தமிழகத்துக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் கூட, காற்றின் உடைய தாக்கம் கடலோர பகுதிகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாக்கி வானிலை சுழல் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கும் விதமாக இந்த 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.

Readmore: புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளீர்களா?. எப்பொழுது கிடைக்கும்?. அனுமதியளித்த தமிழக அரசு!.