தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு வந்து சொந்த ஊரில் உற்சாகமாக கொண்டாடுவார்கள். மொத்தமாக பலரும் சொந்த ஊர் படையெடுப்பதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பஸ்களிலும், ரயில்களிலும் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில், ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தின் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசுகள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை தங்களது ரயில் பயணத்தின் போது எடுத்துச் செல்லக்கூடாது என துண்டு பிரசுரங்களை வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பட்டாசுகளில் ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதால் சிறிய தீப்பொறிகூட மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்தும். ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் பயணிகள் பட்டாசுகளை எடுத்துச் செல்லக் கூடாது. மீறி எடுத்துச் சென்றால் ரயில்வே சட்டம் 1989, பிரிவு 67, 164 மற்றும் 165-ன் கீழ் ரூ.5,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். எனவே, பயணிகள் ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். தடையை மீறி யாராவது ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 139 என்ற ரயில்வே உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Readmore: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு