3 சுழற்சிகளும் ஒரே நேரத்தில் நிலவுவதால் வரும் 18ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கனமழையும் தொடர்ந்து பெய்துவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஒரே நேரத்தில் 3 சுழற்சிகள் நிலவுவதாகவும், இதனால் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக்கடலின் தெற்கு பகுதியில் மையம் கொண்ட சுழற்சி இன்று காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 500 கிமீ தொலைவில் இது மையம் கொண்டுள்ளது. நகராமல் அதே இடத்தில் இந்த காற்றழுத்தம் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடதமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இதேபோல், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இந்த மண்டலம் ஓமான் நாட்டை நோக்கி நகர்கிறது. இந்த 2 வானியல் நிகழ்வுகள் மூலமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. ஆனால் சென்னையில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்வதற்கான காரணம் 3வது சுழற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.