காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 11 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக, தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. அந்தவகையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,938 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,445 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 17,596 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 11 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89.92 அடியாக உள்ளது.
Readmore: 15 நாட்கள் ஆகியும் புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லையா?. இதுதான் காரணம்!.