சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அரசிராமணி குஞ்சாம்பாளையம் பகுதியில் உள்ள கல்யாண ஸ்டோர் முன்பு உட்கார்ந்து குணிந்தபடியே, நீண்ட நேரமாக ஒருவர் இருந்துள்ளார். பின்பு, கடையை திறக்க வந்த கடைக்காரர் அவரை எழுப்ப முயன்றபோது, அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, தேவூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 48) என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இறந்தவரின் மனைவி செல்வநாயகி கொடுத்த புகாரின் பேரிலும், தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், சுப்பிரமணியின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் இறப்புக்கான முழு காரணமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சுப்பிரமணி மூலப்பாதையில் மது வாங்கி குடித்துள்ளார். பின்பு, மழை காரணமாக குஞ்சாம்பாளையம் பகுதியில் உள்ள கல்யாண ஸ்டோரில் மழைக்கு ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் தான், இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More : அலர்ட்டாகிடுங்க!. ஒருவாரத்திற்கு சம்பவம் பெருசா இருக்கு!. இந்த மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!.