நேற்று பெய்த கனமழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை வரும் 13ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ள நிலையில், பருவமழை தொடக்கத்திற்கு முன்னரே தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர் வடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஏரி நிரம்பி அருகில் உள்ள சிவதாபுரம் பகுதியை தண்ணீர் சூழ்ந்தது. 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும், மேலும் சில வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்ததால் அவதியடைந்துள்ளனர். மேலும், வெள்ள நீரை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Readmore: சங்ககிரியில் 15 வயது சிறுமிக்கு திருமணம்!. பெற்றோர், கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!.