சேலம் தலைவாசல் அருகே சண்டையின்போது, தம்பியை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதில் அண்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல் மும்முடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு கிருபாநாத் (18), ரவிபிரசாந்த் (17) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் ஒரே பள்ளியில் பயின்று வரும் நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வாடிக்கையாக இருந்துவந்துள்ளது. அதன்படி, சம்பவத்தன்றும், தம்பி ரவி பிரசாந்த் அண்ணன் கிருபாநாத்திடம் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அண்ணன் கிருபாநாத் கத்தியை எடுத்து தம்பி ரவிபிரசாந்த்தின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்து செய்வதறியாமல் திகைத்த அண்ணன் கிருபாநாத்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அக்கம்பத்தினர் ஓடிவந்து உடனடியாக இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே அண்ணன் கிருபாநாத் உயிரிழந்தார். கழுத்தில் காயத்துடன் ரவிபிரசாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து, தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Readmore: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!