எடப்பாடி அருகே மருத்துவ கலந்தாய்வில் நிகழ்ந்த தொடர் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் சென்று எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் கூறினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவணி பேரூா் கீழ்முகம் ஊராட்சி, போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள குப்பதாசன் வளவு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் – ஆனந்தி தம்பதியின் மகள் புனிதா (19). 2022-2023 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ கலந்தாய்விற்காக பயிற்சி பெற்றுவந்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் மாணவி புனிதாவிற்கு மதிப்பெண் குறைந்ததால் மருத்துவர் இடம் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மாணவி புனிதாவிற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். இதிலும் மாணவி புனிதாவிற்கு அரசு ஒதுக்கிட்டிற்கான இடம் கிடைக்காத நிலையில் மனம் உடைந்த மாணவி புனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், மாணவியின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி இரட்டை வேடம் போடுகிறது. இந்த தேர்வைக் கொண்டு வந்ததும் திமுகதான், இன்றைக்கு அந்த தேர்வை ரத்து செய்வோம் என்று நாடகத்தை அரங்கேற்றுவதும் திமுகதான். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான் என்று குற்றம்சாட்டினார்

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற ஆளுங்கட்சியான திமுகவின் வெற்று அறிவிப்பினால்தான், நாம் இன்று விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, இளைஞர்களையும், மாணவர்களையும் திமுக ஏமாற்றி வருகிறது. மத்தியில் , காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இந்த தேர்வு கொண்டு வரப்பட்டது. பல ஆண்டு காலமாகியும், நீட் தேர்வை ரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இதனால், மாணவர்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது. எதுவுமே கிடையாது, பொய்ச் செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஒரு நாடகத்தைத்தான் அரங்கேற்றி வருகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.

Readmore: எத்தனை உயிர்கள் போனாலும் கண்டுகொள்ளாத மத்திய அரசு..!! எடப்பாடி மாணவிக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!!