ஆந்திராவில் நக்சலைட் தேடுதல் வேட்டையின்போது, மின்சாரம் பாய்ந்து பலியான சிஆர்பிஎப் வீரரின் உடல், அவரது சொந்த ஊரில், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர் அருகே சுண்ணாம்புக்கரட்டூரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(55). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த, 1992ல் மத்திய பாதுகாப்பு படை பிரிவில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 7-ந் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மின் வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கோவை, வெள்ளலுார் மத்திய ஆயுதப்படை போலீஸ் டி.எஸ்.பி. கேசவன், இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் 22 போலீசார், திருநாவுக்கரசுவின் சொந்த தேவூர் அருகே சுண்ணாம்புக்கரட்டூரில் உள்ள வீட்டுக்கு வாகனம் மூலம் உடலை கொண்டு வந்தனர்.

இதையடுத்து, அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் சங்ககிரி தாசில்தார் வாசுகி, சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வள்ளமுனியப்பன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய ஆயுதப்படை போலீசார், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் திருநாவுக்கரசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Readmore: எச்சரிக்கை!. இந்த செயலிகளை போனில் இருந்து உடனடியாக நீக்குங்கள்!. இல்லையென்றால் பெரும் ஆபத்து!.