மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் உள்ளிட்ட தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கவுரவித்தார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் ஆக., 16ல் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 படம் தேர்வானது. அதோடு இந்த படத்திற்கு சிறந்த பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு என 4 விருதுகள் கிடைத்தன. மேலும் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

மேலும் சிறந்த நடிகராக காந்தாரா ரிஷப் ஷெட்டி, சிறந்த படமாக ஆட்டம் (மலையாளம்), சிறந்த சண்டை இயக்குனராக அன்பறிவ் (கேஜிஎப்-2), சிறந்த இசையமைப்பாளராக பிரிதம் (பிரம்மாஸ்திரா-1) என பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று(அக்., 8) நடந்தது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெற்றி பெற்ற திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் ஐஸ்வர்யாராய், விக்ரம், கார்த்தி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, சோபிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதன் படி, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிஅமைப்பு என 4 பிரிவுகளில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த விருதுகள் நேற்று கலைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதன் படி, சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் இயக்குநர்மணிரத்னம் பெற்றுக்கொண்டார். அதே போல, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை அந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி இசைக்கான விருது பொன்னியின் செல்வன் பாகம் 1 – ல் இசையமைப்பாளராக பணியாற்றிய ஏ. ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இது அவர் வாங்கும் 7 வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஒலி அமைப்பிற்கான விருது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒலி அமைப்பாளராக பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த நடிகைக்கான விருது தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்த நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டது.

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடனத்திற்கு சதீஷ் கிருஷ்ணன் உடன் இணைந்து ஜானி மாஸ்டருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தில் அவர் கைதானதால் அவருக்கான விருது இரு தினங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.