ரெய்டுக்கு வராமல் இருக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 1 லட்சம் லஞ்சம் கொடுத்த சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புதிய வாகனம் பதிவு, வாகனம் புதுப் பிப்பு போன்ற பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 23ம் தேதி ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், கடந்த 25ம் தேதி மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக சதாசிவம் என்பவர், இலஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளரான ரவிக்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தனது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு வராமல் இருந்தால் ரூ.1 லட்சம் தருவதாக கூறியதாகவும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜியிடம் புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரிடம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகே சதாசிவம் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் அதிரடியாக சதாசிவத்தை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவத்தை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Readmore: எடப்பாடி, சங்ககிரியிலும் வந்தாச்சு!. களைகட்டும் சிஎன்ஜி பைக் விற்பனை!. 3 நாட்களில் 12 சேல்ஸ்!.