சேலத்தில் பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி பைக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் 12 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் 150சிசி பிரிவில் மிகவும் வலுவாக காலூன்றியிருக்கும் நிறுவனம் பஜாஜ். 125சிசியில் தொடங்கி 450சிசி வரை பல்வேறு இன்ஜின் தேர்வுகளுடன் பல்சர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். பஜாஜின் பல்சர் லைன்அப்பில் முதல் முறை பார்ப்பவர்களுக்கு தலை சுற்றும். அந்தளவிற்கு பல்வேறு பல்சர் பைக்குகளை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

சிஎன்ஜி பேருந்துகள், சிஎன்ஜி ஆட்டோ ரிக்‌ஷாக்கள், சிஎன்ஜி கார் கூட உள்ளது, ஆனால் சிஎன்ஜி பைக் என்பது இந்தியாவிற்கு முற்றிலும் புதுமையானது ஆகும். இப்படியொரு புதுமையை தான் பஜாஜ் நிறுவனம் நிகழ்த்தி காட்டியுள்ளது. அந்த வகையில், CNG எரிபொருளில் இயங்கக்கூடிய முதல் பைக்காக ஃப்ரீடம் 125 பைக்கை கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது பஜாஜ்.

இதன் சிறப்பம்சங்கள் என்னவென்றால், பெட்ரோல் டேங்கின் பாதி இடத்தை சிஎன்ஜி டேங்க் ஆக்கிரமித்துள்ளது. இருக்கைக்கு அடியில், நீளமான குழாய் போன்று சிஎன்ஜி டேங்க் கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 2 லிட்டர்கள் மற்றும் சிஎன்ஜி டேங்கின் கொள்ளளவு 2 கிலோகிராம் ஆகும். பஜாஜின் இந்த முதல் சிஎன்ஜி பைக் ட்ரம், ட்ரம் எல்இடி மற்றும் டிஸ்க் எல்இடி என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சிஎன்ஜி பைக்கில் 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 9.4 பிஎஸ் மற்றும் 9.7 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 2 கிலோ சிஎன்ஜி-இல் அதிகபட்சமாக 200கிமீ-க்கும், 2 லிட்டர் பெட்ரோல் டேங்கில் அதிகப்பட்சமாக 130கிமீ-க்கும் என ஆக மொத்தமாக 330கிமீ-க்கு எரிபொருள் பிரச்சனையின்றி ஃப்ரீடம் 125 பைக்கில் செல்லலாம். வெறும் பெட்ரோலில் இந்த பைக்கை இயக்க முடியும். பெட்ரோலில் பைக்கை இயக்கும்போது வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை விட சிஎன்ஜி-இல் 26.7% குறைவாக வெளியிடப்படும் என பஜாஜ் நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், விற்பனைக்கு அறிமுகமான நிலையில், சேலத்தில் இந்த பைக்கின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த 3 நாட்களில் 12 இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆகின. சாலைக்கான வரியுடன் சேர்த்து இந்த பைக்கின் விலை ரூ.1.17 லட்சம் ஆகும். சேலம், ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, தாரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் 17 சிஎன்ஜி பங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: இதெல்லாம் வெட்கக்கேடு!. ரூ.3.5 லட்சம் கோடி கடன்!. எந்த பெரிய திட்டமும் இல்லை!. திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!.