சேலம் தலைவாசல் கால்நடை வேளாண் ஆராய்ச்சி பண்ணையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று விவசாயிகள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், இதற்காக ரூ.300 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்ட காவிரி குடிநீர் திட்டத்தை உளுந்தூர்பேட்டை சிப்காட்டிற்கு கொண்டு செல்ல முயற்சிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். மறுக்கும் பட்சத்தில் சேலம் மாவட்டமே ஸ்தம்பிக்கும் மாபெரும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1000 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 ம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த கால்நடைப் பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார். “நான்கு ஆண்டு கால ஆட்சியில் புதிய நீர்ப்பாசன திட்டங்களையே கொண்டு வர தமிழக அரசு முயற்சிக்கவில்லை. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம், என்னைக் கோள் புதூர் உள்ளிட்ட திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றாமல் முடக்கப்பட்டுள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.