வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியானதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்மாப்பேட்டை காவலர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் கோவில்கரடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (25). இவர், சில தினங்களுக்கு முன்பு, மினி டெம்போவில் கோனேரிப்பட்டியில் இருந்து ஒசூருக்கு வாழைக்காய் லோடு ஏற்றிச் சென்றுள்ளார். அந்த டெம்போ சின்னப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தபோது, அங்கு பணியில் இருந்த அம்மாப்பேட்டை காவலர் செல்வக்குமார், மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் காவலர் செல்வக்குமார், வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.2,000 லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு டெம்போ டிரைவர் பிரபு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதை வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்து கொண்ட டிரைவர் பிரபு, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பவம் குறித்து பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் சின்னப்பள்ளம் காவல் சோதனைச் சாவடியில் விசாரணை நடத்தினார். இதையடுத்து, காவலர் செல்வக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், வீடியோ வைரலானதால் மன உளைச்சலுக்கு ஆளான காவலர் செல்வக்குமார், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதையடுத்து, செல்வக்குமாரின் உறவினர்கள் அந்தியூர் – மேட்டூர் சாலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More : ”ஒழுங்கா என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க”..!! பள்ளி மாணவியை மிரட்டிய எடப்பாடி இளைஞர் போக்சோவில் கைது..!!