ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நல்ல மழைப் பொழிவை கொடுத்தது. தமிழ்நாட்டிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது.

அதன்படி, மேட்டூர் அணை முழு கொள்ளளவையும் எட்டியது. இதையடுத்து, ஆறு மற்றும் கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி செழித்தன. மேலும் தற்போது, விவசாயிகள் நெல் நடவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், அக்டோபர் 4-வது வாரத்தில் மழை அளவு அதிகரிக்கும் என்றும் 3 மாதங்களுக்கு மழை இருக்கும் என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வருகிற 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை கேரளா, தமிழகம், தெற்கு கர்நாடகா, ராயலசீமா, ஆந்திரப் பிரதேசத்தில் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Readmore: சேலம் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!. பயிர் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!.