அதிமுக ஆட்சியில் வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுகவும் இந்த திட்டத்தை தொடர்ந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், மின் கட்டண உயர்வால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக திடீர் தகவல் வெளியானது. ஆனால், 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று கடந்த வாரம் மின் வாரியம் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மின் கட்டணம் செலுத்துவதில் புதிய நிபந்தனையை மின்வாரியம் விதித்துள்ளது.
அதாவது, நடப்பு அக்டோபர் மாதம் முதல் ரூ.4000 க்கு அதிகமான மின் கட்டணம் வந்தால், அதை நேரடி பணமாக செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளது. ரூ.4000க்கு அதிகமாக மின் கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் எனவும், அடுத்தடுத்த மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாக குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரூ.1000 அல்லது அதற்கு மேல் மின் கட்டணம் வந்தால், ஆன்லைனில் மட்டுமே செலுத்துமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.