எடப்பாடி அருகே அரசிராமணி உள்ளிட்ட மேட்டூர் கிழக்கு கால்வாய் பாசனப்பகுதிகளில் நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் முறையே 27000 ஏக்கரும், 18000 ஏக்கரும் ஆக மொத்தம் 45000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இவற்றில் சேலம் மாவட்டத்தில் 16443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை 30ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்தது, இதனால், எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, மோளப்பாறை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, அரசிராமணி, சிலுவம்பாளையம், தேவூர், கல்வடங்கம், காவேரிப்பட்டி, செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் மற்றும் காவிரி பாசனப் பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

முன்னதாக, விவசாயிகள், நெல் சாகுபடி செய்ய, நாற்றங்காலில் நெல் விதைகள் விதைத்தனர். இதையடுத்து, டிராக்டர் இயந்திரம் மூலம் உழவு செய்யப்பட்டு, நிலம் சமன்படுத்தப்பட்டது. எடப்பாடி வட்டாரத்தில் 3 ஆயிரம் ஏக்கர் மற்றும் தேவூர் வட்டாரத்தில் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Readmore: Google Chrome பயனர்களே எச்சரிக்கை!. திருடப்படும் தனிப்பட்ட தகவல்கள்!. பணம் கேட்டு மிரட்டும் கும்பல்!