சங்ககிரியில் சாலையோர பள்ளத்தில் சூட்கேஸுக்குள் இருந்து அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் வீசிசென்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதுமட்டுமல்லாமல் பெங்களூரில் பெண் ஒருவரை கொலை செய்து உடலை 50க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜ்ஜுக்குள் அடைத்து வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்ட நபர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தற்போது தமிழகத்தில் மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் மேட்டுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் அருகே உள்ள பாலத்தின் கீழ் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசிவந்துள்ளது. சந்தேகமடைந்த அப்பகுதியினர், அங்கு சென்று பார்த்தபோது, மர்மமான முறையில் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சூட்கேஸை திறந்து பார்த்தபோது இளம்பெண்ணின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இளம்பெண் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் இருந்ததால், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வரும் சங்ககிரி போலீசார், இந்த பெண் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Readmore: சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு!. விரிவாக்கம் குறித்து அப்டேட்!