எடப்பாடி பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகரமாக சேலம் உருவெடுத்துள்ளது. இதன்மூலம், சேலம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையங்கள், மேம்பாலங்கள் என அடுத்தடுத்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலத்தில் ஏற்கனவே ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்ட நிலையில், பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு பிரமாண்ட வகையில் ஈரடுக்கு பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையம் கொரோனா தாக்கத்திற்கு பிறகு செயல்படாமல் இருக்கும் நிலையில், மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், எடப்பாடியில் புதிய பேருந்து நிலையம் சுமார் 5 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதனையொட்டி, கடந்த 2023, ஆக்ஸ்ட் 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை பணிகள் நடந்தன. இதையடுத்து, கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டுவது உள்ளிட்ட ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கி தற்போது வரை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த புதிய பேருந்து நிலையத்தில் 36 வணிக கடைகள் அமைய உள்ளன. பயணிகளுக்காக ஓய்வு அறை, பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களை பாதுகாக்கும் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் சுத்திகரிப்பு அறை, நவீன வசதிகளுடன் கூடிய நடைமேடைகள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட உள்ளன.

ஓராண்டுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுவதால், சாலையோர பேருந்து நிறுத்துமிடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்தப் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Readmore: சேலத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு!. கல்லூரி மாணவர்களிடம் தீவிர விசாரணை!