ராசிபுரம் அருகே 2 பிக்கப் வேன்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சுக்கம்பட்டியை சேர்ந்த காய்கறி வியாபாரிகள், நேற்று பேளுக்குறிச்சி சந்தைக்கு காய்கறி விற்பனைக்கு சென்றுள்ளனர். இரவு சந்தை முடிந்து, வீடு திரும்பியுள்ளனர். பேளுக்குறிச்சியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, போடிநாயக்கன்பட்டி பகுதியில் எதிரே வந்த மற்றொரு பிக்கப் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இரவு 10 மணி அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், இரண்டு வேன்களும் நொறுங்கியது.
விபத்தில் ஓட்டுநர் தங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் கவலைக்கிடமான நிலையில் ராசிபுரம், சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.